Wednesday 16 April 2014

மக்கள் அறியா மருத்துவ உலகம் - 2

அனாமதேய !

                            தலைப்பைப் பார்த்தால் ஏதோ சமஸ்கிருத வார்த்தை போல தோன்றுகிறதா ? அரசு மருத்துவமனை வார்டுகளில் தினசரி உச்சாடனம் செய்யப்படும் வார்த்தை தான் இது. சில நேரங்களில் குழப்பங்களுடனும், சில நேரம் கவலையுடனும், சில சமயங்களில் கோபம்/எரிச்சலுடனும்.
                            ரத்தமும் சதையுமாய் கண் முன் இருக்கும் ஒருவரை எப்படி 'அனாமதேய' - Unknown என்று சொல்ல முடியும் ? சாதி, மத அடையாளங்களை விரும்பி துறந்த  பகுத்தறிவு/நாத்திக/முற்போக்கு/நடுநிலை கூட்டங்களை சேர்ந்தவர்களோ ? ஒருவேளை,  'நான் யார்' என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்து விட்ட ஆன்மிக பெரியோரோ ? இல்லவே இல்லை. சுயநினைவின்றியும் சில சமயங்களில் உயிர் இன்றியும் கொண்டு வரப்படும் நோயாளிகளே இவர்கள்.
                            பெரும்பாலும் அரசு ஆஸ்பத்திரி unknown-கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், நடை பாதை 'குடி'மக்கள், விபத்தில் தலையில் அடிபட்டவர்களாக இருப்பர். மனிதாபிமானம் தேய்ந்து முகநூல் பதிவுகளாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், மனசாட்சி உறுத்தினாலும் , கூட யார் அலைவது என்று புள்ளகுட்டிகாரர்களின் கேள்விக்கு பதிலாய் 108 ஆம்புலன்ஸ் திட்டம் வந்து சேர்ந்தது. ( 108 என்றாலே பயிற்சி மருத்துவர்களும், இரவு நேர செவிலியர்களும் அலறி துடிப்பது வேறு கதை - அது அப்புறமா ;) ) தடூப்பூசிகளாலும், மருந்துகளாலும்  தொற்று நோய்கள்  குறைந்த பின்னர் வாழ்க்கைமுறை கோளாறால் வரும் நோய்கள் பெருகியதை போலவே, இந்த இலவச ஆம்புலன்சால் உயிர் இழப்புகள் குறைந்து unknownகள் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது.




                            பெயர், வயது, ஊர் என்று ஒன்றுமே அறிய முடியாத நிலையில் இவர்கள் unknown என்று பதியப்பட்டு சிகிச்சை தொடங்கப்படும். பல நேரங்களில் நிறைய பேர் இப்படி கொண்டு வரப்பட்டு unknown 1, unknown 2, 3 என்று பட்டியல் நீளும். வாய் திறந்து கேட்க போவதில்லை என்ற துணிச்சலில் ஏற்கெனவே இருக்கும் அதிக வேலைப்பளுவில் இவர்களை ஒதுக்கி விடுவார்கள் என்று நினைப்பு வருமே. அரசு மருத்துவமனை என்றாலே அலட்சியம் என்று காணாமலே கற்று உணர்ந்த பெருமக்களுக்கு கண்டிப்பாக வரும். தம் குழந்தைகளுள் மாற்று திறனாளி இருந்தால் ஒரு தாய் எவ்வாறு அதிக கவனம் செலுத்துவாளோ அதை போலவே இவர்கள் அதிக கவனம் பெறுவர். மருத்துவ ஊழியர்கள் மட்டுமல்ல அருகிலுள்ள நோயாளிகளின் 'செல்லம்' ஆகிவிடுவார் இந்த unknown. உங்களால் நம்ப முடியாவிட்டாலும் இதுவே உண்மை.
                          இப்படி கொண்டு வரப்படும் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பும் போது அரங்கேறும் காட்சிகள் மிக உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். மருத்துவரின் முன், பின் சந்ததிகள் அனைத்தும் அன்று கோடி புண்ணியம் அடைந்து இருக்கும். பிறவிப் பயனை அடைந்த பெருமகிழ்ச்சி திளைத்து இருக்கும்.
                           எல்லா unknownகளுக்கும் இது மாதிரியான 'சுபம்' அமைந்து விடுவதில்லை. நினைவு திரும்பாமலே மறைந்து அநாதை பிணங்களாக ஆகி  விடுவதும் உண்டு. 2009-இல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக அவசர சிகிச்சை பிரிவில் இருந்தேன். ஒரு சனிக்கிழமை. கிழக்கு கடற்கரை சாலையில் குடிபோதையில் வாகன விபத்து. அள்ளி வந்தனர் போலீசார். அதிகாலை 2 மணி. மொத்த இடமும் திகிலான அமைதியில் நிறைந்து இருக்க ஒரு டார்ச்சை எடுத்துகொண்டு ஆம்புலன்சில்  என்ட்ரி ஆகிறேன் நான். மூன்று உருக்குலைந்த கூழான உடல்கள். அந்த எச்சங்களில் மச்சங்கள் தேடி(identification mark)  unknown 1, 2, 3 என்று பதிந்து பிணவறைக்கு அனுப்பி வைத்தேன். மறக்க முடியாத அனுபவம்.
                            ஆடையை பார்த்தே  பர்சின் கனத்தை எடைபோடும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய கூச்சலில் அரசு மருத்துவமனைகளின் இந்த அர்ப்பணிப்பு மௌனிக்கப்படுகிறது. இது எதுவுமே தெரியாமல் கூகிளில் தேடி , கற்பனை கலந்து , MS படித்தவர்களை பற்றி MS-வொர்டில் விஷம் கக்கும் 'மருத்துவ எழுத்தாளர்கள்' ஏற்றும் கடுப்பு ஒருபுறம்.
                              அடையாளம் எவ்வளவு முக்கியம் என்று தெரிய செலவு பண்ணி 'கோலி சோடா' பார்க்க தேவையில்லை. அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை சென்று வாருங்கள். மீடியா வெளிச்சம் கிட்டாத பல அன்னை தெரசாக்கள் அங்கு உண்டு.
 
தொடரும்....

Sunday 13 April 2014

முடியாது....

முடியாது !!! 


முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை என்ற பஞ்ச் டயலாக்கை டெல்லியில் நம் கேப்டன் விஜயகாந்த் சொல்லி கேட்டு இருக்கிறோம். முடியாது என்பது எதிர்மறையாகவும் இயலாமையின் வெளிப்பாடாகவுமே இதுவரை நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் 'முடியாது ' என்று சொல்லுவது நமக்கு மிகுந்த நன்மை பயக்க கூடியது. 
நம்மிடம் பணம் இருப்பதை அறிந்தே ஒரு நண்பர் பண உதவி கேட்கிறார். நமக்கும் அப்போது ஒரு செலவு  இருக்கிறது என்று வைத்து கொள்வோம். முடியாது என்று சொல்ல முடியாமல் நண்பருக்கு பணம் தந்துவிட்டு நமது தேவைக்காக இன்னொருத்தரிடம் கடன் வாங்குவோம். இது தேவையா ? முடியாது என்று சொல்ல முடிந்தால் இந்த சிரமம் நமக்கு இருக்காதே. 

அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களோ மேலதிகாரியோ நமது வேலையை தாண்டி கூடுதலாக ஒரு பணியை சுமத்தினால் முடியாது என்று சொல்ல முடிவதில்லை. அவர்கள் என்ன நினைப்பார்களோ , வேறு ஏதாவது சிரமம் கொடுப்பார்களோ என்று எண்ணியும் அந்த கூடுதல் வேலையை செய்கிறோம். 

திருமண சமயத்தில் தைரியமாக  இந்த பெண்/ஆண் வேண்டாம். இது முடியாது என்று சொல்ல துணிவில்லாமல் விருப்பம் இல்லாத வாழ்வில் வெந்து தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

மேற்கு உலகத்தார் இதில் எப்போதும் தெளிவு. தனக்கு பிடிக்காத தனக்கு ஒத்து வராத விடயம் என்றால் முகத்திற்கு நேராக முடியாது என்று சொல்ல அவர்கள் தயங்குவதே இல்லை.நமக்கு மட்டும் ஏன் இது இவ்ளோ சிரமமானதாக் இருக்கிறது ? அதற்கு நம் கலாச்சாரமும் முக்கிய காரணம். ஹாஃப்ஸ்டீட் (Hofstede) என்பவர் உலக நாடுகளின் தன்மை , கலாச்சாரம் பற்றி ஆராய்ந்து அவற்றை வகைப்படுத்தியுள்ளார். இதில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பெண் தனம் (Feminine) உள்ள நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். பெண் தன்மை என்பது இங்கே மென்மை, பணிவு என்று பொருள்படும். மேலும் இவர், நாம் கூட்டு மனப்பான்மை (collectivism) உடையவர்கள் என்று கூறுகிறார். அதாவது தன் நலத்தை தாண்டி குடும்பத்தின் , வேலையிடத்தின் நலனை முன்னிறுத்துபவர்கள் என்கிறார். 

நல்லது தானே. இதில் என்ன கெடுதல் என்கிறீர்களா ? மேலோட்டமாக பார்க்க நமக்கு அப்படி தான் தெரியும். அம்மா என்றால் தியாகம் செய்பவர் என்றே எண்ணி பழக்கப்பட்டதால் அவருக்கு என்று ஒரு வாழ்க்கை, உணர்வு என்று இருக்கும் என்பதை எப்படி நாம் பார்க்க தவறினோமோ அதே போல் தான் இதுவும். அடுத்தவர் நலனை பார்த்தே வாழ்ந்தால் நமக்கு என்ற ஒன்றே இருக்காது. உண்மையில் முடியாது என்று சொல்ல முடியாமல் வேலை ஏற்பவர்கள் பெரும்பாலானோர் அதை விரும்பி செய்வது இல்லை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கட்டாயத்தால் செய்வோரே அதிகம்.

முடியாது என்று சொல்லி பழகுவோம். கொஞ்சம் சுயநலமாக இருப்பது தவறில்லை. தியாகியாக வாழ்ந்து சரித்திரத்தில் இடம்பெற போவதில்லை...
நல்லவர் என்ற பெயரை விட நிம்மதியாக இருப்பது மிக முக்கியம்.

Learn to say 'NO' .....

Saturday 5 April 2014

மக்கள் அறியா மருத்துவ உலகம் - பாகம் 1


மருத்துவர்களின் வாழ்க்கை - பாகம் 1

                    மருத்துவர்கள் , நாத்திகர்களும் நம்பும் கடவுளாக இருந்தனர். உணவு, கல்வி என எல்லாமும் வணிகமயமாகி விட்ட பிறகு மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே இருக்கிறது. மக்கள் நுகர்வோராகி விட்டபடியால் மருத்துவர்களும் வியாபாரிகளாக ஆக்கப்படுகின்றனர். சிறு வணிகர்கள் வயிற்றில் அடித்து வெளிநாட்டு பெரு முதலாளிகளுக்கு கதவை திறந்த அரசுகள், மருத்துவர்களின் வாழ்வையும் அழித்து கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு கொத்தடிமையாக கூலிக்கு மாரடிக்க நிர்ப்பந்திக்கின்றன. எதிரி யார் நண்பன் யார் என்று உணராத மக்களும் காலம் காலமாக மருத்துவ உலகின் மேல் இருக்கும் காழ்ப்பால் தவறான பக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நிற்கின்றனர். தம் தலையில் தாமே மண்ணை போட்டு கொள்கின்றனர். இந்த வாழ்வா சாவா போராட்டத்திலும், ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழியைக் காக்க அல்லும் பகலும் போராடும் மருத்துவர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். மானுடத்தின் மீதான நம்பிக்கையையும் மருத்துவ தொழிலின்  உன்னதத்தையும் காத்து வரும் மருத்துவர்களுள் ஒருவரின் அனுபவம் இதோ.
                          "பெருகி வரும் வாகன் விபத்துகள் உலகெங்கிலும் பல உயிர்களை பலி வாங்கியுள்ளன. இந்த சமயங்களில் பெரும்பாலானோர் உறவினர்களால் கொண்டு வரப்படுவர்.20% போலீசாராலும், வழிபோக்கர்களாலும் கொண்டு வரப்படுவர். அவர்களை பற்றிய விவரம் ஏதும் இருக்காது. இது மாதிரி சமயங்களில் அரசு மருத்துவமனை ஒன்றே இவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கும். வெகு அரிதான சமயங்களில் இவர்கள் பிழைப்பர்.
                      சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரவு 8 மணிக்கு தலையில் அடிபட்ட நிலையில் சுயநினைவின்றி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சாலையில் கிடந்த அவரை வழிப்போக்கர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தந்து அனுப்பி வைத்துள்ளனர். அவரின் இரத்த அழுத்தம் குறைவாகவும், மூளையின் செயல் திறன் மிகவும் கவலைக்கிடமாகவும் இருந்தது. மூச்சு விட சிரமம் இருந்ததால் வென்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டது. இலவச சி.டி ஸ்கேன் எடுத்த போது . அவரது மூளையில் இரு இடங்களில் பெரும் ரத்த கசிவு இருந்தது தெரிய வந்தது. உலகத்தின் சிறந்த வசதிகள் பெற்ற மருத்துவமனைகளில் கூட இது போன்ற நோயாளிகள் பிழைப்பது கடினம். கோடீஸ்வரரான கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர் இது போலவே தலையில் அடிபட்டதால் இன்னும் கோமாவில் இருக்கிறார். இந்த நோயாளிக்கு இரண்டு  பக்கமும் சேர்த்து மொத்தம் ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. (அதி விரைவான அறுவை சிகிச்சை நிபுணருக்கு கூட ஒரு பக்கம் செய்யவே ஒரு மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது).

 
         

                                        இரண்டு வாரங்களில் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வென்ட்டிலேட்டர் நீக்கப்பட்டது.  தன் பெயரும் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மட்டும் சொல்கிறார். இன்று அவர் அனுமதிக்கப்பட்ட 31வது நாள். இத்தனை நாட்களும் மருத்துவர்களும் இதர ஊழியர்களும் தம் சொந்த பணத்தில் அவருக்கு உடைகளும் அவரின் இதர தேவைகளையும் கவனித்து வந்துள்ளனர். உணவும் மருந்துகளும் அரசின் செலவு. இது நாள் வரை அவரிடமிருந்து ஒரு பைசா பெறப்படவில்லை. இதுவே அரசு மருத்துவமனைகளின் உன்னதம். எம் மருத்துவ துறை முன்னோடிகளும் ஆசிரியர்களும் தம் வாழ்வில் இது போன்று ஆயிரக்கணக்கானோரை காப்பாற்றி உள்ளனர் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இந்த நோயாளியின் இடத்தில் நான் இருந்திருந்தால் என் குடும்பம் எப்படி துடித்திருக்கும் என்பதே இதை பதிய தூண்டியது.

 மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். தனியார் துறையை விடுத்து அரசு பொது மருத்துவமனைகளை வலுவூட்டுங்கள்.

சாமானியனுக்கும் கோடீஸ்வரனுக்கும் உயிர் என்பது ஒன்றே . "

தகவல்: மரு. ராஜா விக்னேஷ்

அரசு மருத்துமனைகளில்  இது போன்ற காட்சிகள் அன்றாடம் நடந்து கொண்டு இருக்கின்றன.ஒருமுறை கூட அந்தப்பக்கம் எட்டி பார்க்காதவர்கள் இதை என்றும் உணர போவதில்லை. நோயாளி நலம் பெறுவதும் பிழைப்பதும் ஒரு மருத்துவருக்கு பிரசவித்த பெண்ணிற்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஒப்பானது. அந்த தருணங்களில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு முன் உங்கள் பணம் மதிப்பில்லாதது. சேவை என்பது இலவசமாக செய்வது என்ற எண்ணத்தை பொதுமக்கள் விட்டொழிக்க வேண்டும்.

தொடரும்.....

Friday 4 April 2014

வைகோவின் வீழ்ச்சி






                          ம.தி.மு.க தலைவர் வைகோ தமிழக மக்களின் குட் புக்கில் இருக்கும் வெகு சில அரசியல்வாதிகளில் முதன்மையானவர். எம்.ஜி.ஆர் விலகியபோதே தளராத தி.மு.க , வைகோ வெளியேறிய போது ஆடி தான் போனது.  அந்த தாக்கத்தை தக்க வைத்து கொண்டு மாபெரும் அரசியல் இயக்கமாக வளர அவரால் முடியாமல் போனது. ஆனாலும், ஊழல் கறை படியாதவர், தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவர் என்று அனைவராலும் மதிக்கப்படுபவர்.
                         வைகோ மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஈழத்தை வைத்து அரசியல் நடத்துபவர் என்பதும் அவரது சமீப கால மதுவிலக்கு போராட்டங்கள் பா.ம.கவின் நீண்ட கால கொள்கையை காப்பி அடித்து செய்யப்படுபவை என்பதும் அவற்றுள் முதன்மையானவை. எனினும், ராஜீவ் கொலை வழக்கில் மூவர் விடுதலைக்கு அவரின் அரும்பணி யாராலும் மறுக்க முடியாதது.
                         வைகோ என்றாலே எல்லோருக்கும் நினைவு வருவது அவரது பேச்சாற்றல் தான். வழக்கறிஞருக்கு பேச கற்று தர வேண்டியது இல்லை என்றாலும் அவரிடம் இயல்பாகவே பேச்சாற்றல் ததும்பி நிற்கும். வடுக வந்தேறிகள் அடைப்பிற்குள் அவரும் இன்று சிறைப்பட்டாலும் அவர் தமிழில் குறை என்பது இருக்காது. 
                    திராவிட போர்வையில் வந்தேறிகளும் தமிழ் கொண்டே எம் நிலத்தை, அதிகாரத்தை ஆக்கிரமிக்க முடிந்தது. அதுவே எம் தமிழின் வலிமை.
இன்று குத்தாட்டங்களும், ஆபாச பேச்சுக்களும் விரவி நிற்கும் அரசியல் மேடைகளில் தங்கு தடையின்றி தமிழ் ஒலித்த பொற்காலத்தின் மிச்சம் வைகோ. ( கலைஞரின் பேச்சுக்கள் பழைய பொலிவை இழந்துவிட்டன). 
                    அப்படிப்பட்டவரின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்து இன்றும் அதே பாணியில் செயல்பட்டு அவுட் டேடட் ஆகி காமெடி பீசாக நிற்பதில் டி.ராஜேந்தரை நினைவுபடுத்துகிறார். தமிழ்தேசிய இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக ஒரு ரிட்டயர்ட் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தேர்தல் நேரங்களில் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. முன்பு கழுத்து பிடித்து தள்ளாத குறையாக அதிமுக கூட்டணியில் இருந்து அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேறினார். இன்று ஊருக்கு முன் பாஜக கூட்டணியில் துண்டு போட்டு அமர்ந்து விட்டார். இவருக்கு பின்னால் கூட்டணியில் சேர்ந்த பா.ம.கவும் முந்தா நாள் முளைத்த காளானான தேமுதிகவும் தொகுதி பங்கீட்டில் புஜபல பராக்கிரமத்தை காட்டி போட்டியிட, கொடுத்ததை வாங்கி கொண்ட நல்ல பிள்ளையாக அமைதியாக இருந்து விட்டார். Beggars can't be choosers என்று நினைத்தாரோ என்னவோ.
                      இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் அமைந்து விட்டது அவருக்காக விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் இந்த படம்.

                            
                                     சிங்கம் இளைச்சா சுண்டெலி ஏறி விளையாடும்













                              பாராளுமன்றம் முதல் ஐரோப்பிய யூனியன் வரை கர்ஜிக்கும் வைகோ ஓர் பொம்மை போல் வணக்கம் தெரிவித்தும், கைகூப்பியும் அடக்க ஒடுக்கமாக நிற்க, ஒரு வரி தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியாத விஜயகாந்த் அவருக்காக பேசி வாக்கு சேகரித்து வருவது காலக்கொடுமை என்று தான் சொல்ல வேண்டும். 
                            வைகோ.அவர்  பெயரை போலவே கால ஓட்டத்தில் சுருங்கி நிற்கிறது அவரின் ஆளுமையும்.