Wednesday, 16 April 2014

மக்கள் அறியா மருத்துவ உலகம் - 2

அனாமதேய !

                            தலைப்பைப் பார்த்தால் ஏதோ சமஸ்கிருத வார்த்தை போல தோன்றுகிறதா ? அரசு மருத்துவமனை வார்டுகளில் தினசரி உச்சாடனம் செய்யப்படும் வார்த்தை தான் இது. சில நேரங்களில் குழப்பங்களுடனும், சில நேரம் கவலையுடனும், சில சமயங்களில் கோபம்/எரிச்சலுடனும்.
                            ரத்தமும் சதையுமாய் கண் முன் இருக்கும் ஒருவரை எப்படி 'அனாமதேய' - Unknown என்று சொல்ல முடியும் ? சாதி, மத அடையாளங்களை விரும்பி துறந்த  பகுத்தறிவு/நாத்திக/முற்போக்கு/நடுநிலை கூட்டங்களை சேர்ந்தவர்களோ ? ஒருவேளை,  'நான் யார்' என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்து விட்ட ஆன்மிக பெரியோரோ ? இல்லவே இல்லை. சுயநினைவின்றியும் சில சமயங்களில் உயிர் இன்றியும் கொண்டு வரப்படும் நோயாளிகளே இவர்கள்.
                            பெரும்பாலும் அரசு ஆஸ்பத்திரி unknown-கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், நடை பாதை 'குடி'மக்கள், விபத்தில் தலையில் அடிபட்டவர்களாக இருப்பர். மனிதாபிமானம் தேய்ந்து முகநூல் பதிவுகளாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், மனசாட்சி உறுத்தினாலும் , கூட யார் அலைவது என்று புள்ளகுட்டிகாரர்களின் கேள்விக்கு பதிலாய் 108 ஆம்புலன்ஸ் திட்டம் வந்து சேர்ந்தது. ( 108 என்றாலே பயிற்சி மருத்துவர்களும், இரவு நேர செவிலியர்களும் அலறி துடிப்பது வேறு கதை - அது அப்புறமா ;) ) தடூப்பூசிகளாலும், மருந்துகளாலும்  தொற்று நோய்கள்  குறைந்த பின்னர் வாழ்க்கைமுறை கோளாறால் வரும் நோய்கள் பெருகியதை போலவே, இந்த இலவச ஆம்புலன்சால் உயிர் இழப்புகள் குறைந்து unknownகள் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது.
                            பெயர், வயது, ஊர் என்று ஒன்றுமே அறிய முடியாத நிலையில் இவர்கள் unknown என்று பதியப்பட்டு சிகிச்சை தொடங்கப்படும். பல நேரங்களில் நிறைய பேர் இப்படி கொண்டு வரப்பட்டு unknown 1, unknown 2, 3 என்று பட்டியல் நீளும். வாய் திறந்து கேட்க போவதில்லை என்ற துணிச்சலில் ஏற்கெனவே இருக்கும் அதிக வேலைப்பளுவில் இவர்களை ஒதுக்கி விடுவார்கள் என்று நினைப்பு வருமே. அரசு மருத்துவமனை என்றாலே அலட்சியம் என்று காணாமலே கற்று உணர்ந்த பெருமக்களுக்கு கண்டிப்பாக வரும். தம் குழந்தைகளுள் மாற்று திறனாளி இருந்தால் ஒரு தாய் எவ்வாறு அதிக கவனம் செலுத்துவாளோ அதை போலவே இவர்கள் அதிக கவனம் பெறுவர். மருத்துவ ஊழியர்கள் மட்டுமல்ல அருகிலுள்ள நோயாளிகளின் 'செல்லம்' ஆகிவிடுவார் இந்த unknown. உங்களால் நம்ப முடியாவிட்டாலும் இதுவே உண்மை.
                          இப்படி கொண்டு வரப்படும் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பும் போது அரங்கேறும் காட்சிகள் மிக உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். மருத்துவரின் முன், பின் சந்ததிகள் அனைத்தும் அன்று கோடி புண்ணியம் அடைந்து இருக்கும். பிறவிப் பயனை அடைந்த பெருமகிழ்ச்சி திளைத்து இருக்கும்.
                           எல்லா unknownகளுக்கும் இது மாதிரியான 'சுபம்' அமைந்து விடுவதில்லை. நினைவு திரும்பாமலே மறைந்து அநாதை பிணங்களாக ஆகி  விடுவதும் உண்டு. 2009-இல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக அவசர சிகிச்சை பிரிவில் இருந்தேன். ஒரு சனிக்கிழமை. கிழக்கு கடற்கரை சாலையில் குடிபோதையில் வாகன விபத்து. அள்ளி வந்தனர் போலீசார். அதிகாலை 2 மணி. மொத்த இடமும் திகிலான அமைதியில் நிறைந்து இருக்க ஒரு டார்ச்சை எடுத்துகொண்டு ஆம்புலன்சில்  என்ட்ரி ஆகிறேன் நான். மூன்று உருக்குலைந்த கூழான உடல்கள். அந்த எச்சங்களில் மச்சங்கள் தேடி(identification mark)  unknown 1, 2, 3 என்று பதிந்து பிணவறைக்கு அனுப்பி வைத்தேன். மறக்க முடியாத அனுபவம்.
                            ஆடையை பார்த்தே  பர்சின் கனத்தை எடைபோடும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய கூச்சலில் அரசு மருத்துவமனைகளின் இந்த அர்ப்பணிப்பு மௌனிக்கப்படுகிறது. இது எதுவுமே தெரியாமல் கூகிளில் தேடி , கற்பனை கலந்து , MS படித்தவர்களை பற்றி MS-வொர்டில் விஷம் கக்கும் 'மருத்துவ எழுத்தாளர்கள்' ஏற்றும் கடுப்பு ஒருபுறம்.
                              அடையாளம் எவ்வளவு முக்கியம் என்று தெரிய செலவு பண்ணி 'கோலி சோடா' பார்க்க தேவையில்லை. அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை சென்று வாருங்கள். மீடியா வெளிச்சம் கிட்டாத பல அன்னை தெரசாக்கள் அங்கு உண்டு.
 
தொடரும்....

4 comments:

  1. நன்று உங்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆகா அருமை !மரு சந்திர லேகா உங்களுடைய ஆக்கங்கள் அருமை.
    எச்சங்களில் மச்சங்கள் தேடி ,MS படித்தவர்களை MS WORD ல் என உங்கள் எழுத்தோட்டம படிப்பவர் மனதில் தானாகவே copy ,paste ஆகிவிடுகிறது.உங்களுக்குள் உள்ள எழுத்தாளர் அவதூறு ஊடகங்களிடம அசால்டாக assault அடி வாங்கி அடி வாங்கி ஆம்புலன்ஸ் இல் ஏற்றும் மன நிலையில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 100ml 25%குளுக்கோஸ் ஏற்றியது போல் இருக்கு.அவசர அழைப்பு வருகிறது
    பிறகு ஒரு பின்னூட்டமிடுகிறேன்

    ReplyDelete