Sunday 13 April 2014

முடியாது....

முடியாது !!! 


முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை என்ற பஞ்ச் டயலாக்கை டெல்லியில் நம் கேப்டன் விஜயகாந்த் சொல்லி கேட்டு இருக்கிறோம். முடியாது என்பது எதிர்மறையாகவும் இயலாமையின் வெளிப்பாடாகவுமே இதுவரை நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் 'முடியாது ' என்று சொல்லுவது நமக்கு மிகுந்த நன்மை பயக்க கூடியது. 
நம்மிடம் பணம் இருப்பதை அறிந்தே ஒரு நண்பர் பண உதவி கேட்கிறார். நமக்கும் அப்போது ஒரு செலவு  இருக்கிறது என்று வைத்து கொள்வோம். முடியாது என்று சொல்ல முடியாமல் நண்பருக்கு பணம் தந்துவிட்டு நமது தேவைக்காக இன்னொருத்தரிடம் கடன் வாங்குவோம். இது தேவையா ? முடியாது என்று சொல்ல முடிந்தால் இந்த சிரமம் நமக்கு இருக்காதே. 

அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களோ மேலதிகாரியோ நமது வேலையை தாண்டி கூடுதலாக ஒரு பணியை சுமத்தினால் முடியாது என்று சொல்ல முடிவதில்லை. அவர்கள் என்ன நினைப்பார்களோ , வேறு ஏதாவது சிரமம் கொடுப்பார்களோ என்று எண்ணியும் அந்த கூடுதல் வேலையை செய்கிறோம். 

திருமண சமயத்தில் தைரியமாக  இந்த பெண்/ஆண் வேண்டாம். இது முடியாது என்று சொல்ல துணிவில்லாமல் விருப்பம் இல்லாத வாழ்வில் வெந்து தவிப்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

மேற்கு உலகத்தார் இதில் எப்போதும் தெளிவு. தனக்கு பிடிக்காத தனக்கு ஒத்து வராத விடயம் என்றால் முகத்திற்கு நேராக முடியாது என்று சொல்ல அவர்கள் தயங்குவதே இல்லை.நமக்கு மட்டும் ஏன் இது இவ்ளோ சிரமமானதாக் இருக்கிறது ? அதற்கு நம் கலாச்சாரமும் முக்கிய காரணம். ஹாஃப்ஸ்டீட் (Hofstede) என்பவர் உலக நாடுகளின் தன்மை , கலாச்சாரம் பற்றி ஆராய்ந்து அவற்றை வகைப்படுத்தியுள்ளார். இதில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பெண் தனம் (Feminine) உள்ள நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். பெண் தன்மை என்பது இங்கே மென்மை, பணிவு என்று பொருள்படும். மேலும் இவர், நாம் கூட்டு மனப்பான்மை (collectivism) உடையவர்கள் என்று கூறுகிறார். அதாவது தன் நலத்தை தாண்டி குடும்பத்தின் , வேலையிடத்தின் நலனை முன்னிறுத்துபவர்கள் என்கிறார். 

நல்லது தானே. இதில் என்ன கெடுதல் என்கிறீர்களா ? மேலோட்டமாக பார்க்க நமக்கு அப்படி தான் தெரியும். அம்மா என்றால் தியாகம் செய்பவர் என்றே எண்ணி பழக்கப்பட்டதால் அவருக்கு என்று ஒரு வாழ்க்கை, உணர்வு என்று இருக்கும் என்பதை எப்படி நாம் பார்க்க தவறினோமோ அதே போல் தான் இதுவும். அடுத்தவர் நலனை பார்த்தே வாழ்ந்தால் நமக்கு என்ற ஒன்றே இருக்காது. உண்மையில் முடியாது என்று சொல்ல முடியாமல் வேலை ஏற்பவர்கள் பெரும்பாலானோர் அதை விரும்பி செய்வது இல்லை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கட்டாயத்தால் செய்வோரே அதிகம்.

முடியாது என்று சொல்லி பழகுவோம். கொஞ்சம் சுயநலமாக இருப்பது தவறில்லை. தியாகியாக வாழ்ந்து சரித்திரத்தில் இடம்பெற போவதில்லை...
நல்லவர் என்ற பெயரை விட நிம்மதியாக இருப்பது மிக முக்கியம்.

Learn to say 'NO' .....

1 comment: