Saturday, 5 April 2014

மக்கள் அறியா மருத்துவ உலகம் - பாகம் 1


மருத்துவர்களின் வாழ்க்கை - பாகம் 1

                    மருத்துவர்கள் , நாத்திகர்களும் நம்பும் கடவுளாக இருந்தனர். உணவு, கல்வி என எல்லாமும் வணிகமயமாகி விட்ட பிறகு மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே இருக்கிறது. மக்கள் நுகர்வோராகி விட்டபடியால் மருத்துவர்களும் வியாபாரிகளாக ஆக்கப்படுகின்றனர். சிறு வணிகர்கள் வயிற்றில் அடித்து வெளிநாட்டு பெரு முதலாளிகளுக்கு கதவை திறந்த அரசுகள், மருத்துவர்களின் வாழ்வையும் அழித்து கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு கொத்தடிமையாக கூலிக்கு மாரடிக்க நிர்ப்பந்திக்கின்றன. எதிரி யார் நண்பன் யார் என்று உணராத மக்களும் காலம் காலமாக மருத்துவ உலகின் மேல் இருக்கும் காழ்ப்பால் தவறான பக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நிற்கின்றனர். தம் தலையில் தாமே மண்ணை போட்டு கொள்கின்றனர். இந்த வாழ்வா சாவா போராட்டத்திலும், ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழியைக் காக்க அல்லும் பகலும் போராடும் மருத்துவர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். மானுடத்தின் மீதான நம்பிக்கையையும் மருத்துவ தொழிலின்  உன்னதத்தையும் காத்து வரும் மருத்துவர்களுள் ஒருவரின் அனுபவம் இதோ.
                          "பெருகி வரும் வாகன் விபத்துகள் உலகெங்கிலும் பல உயிர்களை பலி வாங்கியுள்ளன. இந்த சமயங்களில் பெரும்பாலானோர் உறவினர்களால் கொண்டு வரப்படுவர்.20% போலீசாராலும், வழிபோக்கர்களாலும் கொண்டு வரப்படுவர். அவர்களை பற்றிய விவரம் ஏதும் இருக்காது. இது மாதிரி சமயங்களில் அரசு மருத்துவமனை ஒன்றே இவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கும். வெகு அரிதான சமயங்களில் இவர்கள் பிழைப்பர்.
                      சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரவு 8 மணிக்கு தலையில் அடிபட்ட நிலையில் சுயநினைவின்றி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சாலையில் கிடந்த அவரை வழிப்போக்கர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தந்து அனுப்பி வைத்துள்ளனர். அவரின் இரத்த அழுத்தம் குறைவாகவும், மூளையின் செயல் திறன் மிகவும் கவலைக்கிடமாகவும் இருந்தது. மூச்சு விட சிரமம் இருந்ததால் வென்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டது. இலவச சி.டி ஸ்கேன் எடுத்த போது . அவரது மூளையில் இரு இடங்களில் பெரும் ரத்த கசிவு இருந்தது தெரிய வந்தது. உலகத்தின் சிறந்த வசதிகள் பெற்ற மருத்துவமனைகளில் கூட இது போன்ற நோயாளிகள் பிழைப்பது கடினம். கோடீஸ்வரரான கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர் இது போலவே தலையில் அடிபட்டதால் இன்னும் கோமாவில் இருக்கிறார். இந்த நோயாளிக்கு இரண்டு  பக்கமும் சேர்த்து மொத்தம் ஒண்ணே முக்கால் மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. (அதி விரைவான அறுவை சிகிச்சை நிபுணருக்கு கூட ஒரு பக்கம் செய்யவே ஒரு மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது).

 
         

                                        இரண்டு வாரங்களில் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வென்ட்டிலேட்டர் நீக்கப்பட்டது.  தன் பெயரும் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மட்டும் சொல்கிறார். இன்று அவர் அனுமதிக்கப்பட்ட 31வது நாள். இத்தனை நாட்களும் மருத்துவர்களும் இதர ஊழியர்களும் தம் சொந்த பணத்தில் அவருக்கு உடைகளும் அவரின் இதர தேவைகளையும் கவனித்து வந்துள்ளனர். உணவும் மருந்துகளும் அரசின் செலவு. இது நாள் வரை அவரிடமிருந்து ஒரு பைசா பெறப்படவில்லை. இதுவே அரசு மருத்துவமனைகளின் உன்னதம். எம் மருத்துவ துறை முன்னோடிகளும் ஆசிரியர்களும் தம் வாழ்வில் இது போன்று ஆயிரக்கணக்கானோரை காப்பாற்றி உள்ளனர் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இந்த நோயாளியின் இடத்தில் நான் இருந்திருந்தால் என் குடும்பம் எப்படி துடித்திருக்கும் என்பதே இதை பதிய தூண்டியது.

 மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். தனியார் துறையை விடுத்து அரசு பொது மருத்துவமனைகளை வலுவூட்டுங்கள்.

சாமானியனுக்கும் கோடீஸ்வரனுக்கும் உயிர் என்பது ஒன்றே . "

தகவல்: மரு. ராஜா விக்னேஷ்

அரசு மருத்துமனைகளில்  இது போன்ற காட்சிகள் அன்றாடம் நடந்து கொண்டு இருக்கின்றன.ஒருமுறை கூட அந்தப்பக்கம் எட்டி பார்க்காதவர்கள் இதை என்றும் உணர போவதில்லை. நோயாளி நலம் பெறுவதும் பிழைப்பதும் ஒரு மருத்துவருக்கு பிரசவித்த பெண்ணிற்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஒப்பானது. அந்த தருணங்களில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு முன் உங்கள் பணம் மதிப்பில்லாதது. சேவை என்பது இலவசமாக செய்வது என்ற எண்ணத்தை பொதுமக்கள் விட்டொழிக்க வேண்டும்.

தொடரும்.....

6 comments:

 1. அற்புதம்! அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

  amas32

  ReplyDelete
  Replies
  1. இது அரிதானதாக அல்லாமல் அன்றாட காட்சியாக இருப்பதே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் .

   Delete
 2. Yes there is no better joy than seeing your patient getting better after ur surgery or intensive treatment

  ReplyDelete
 3. ஃபேஸ்புக்கில் சந்திபோம்..

  ReplyDelete